சர்வதேச செஞ்சிலுவை தினத்தை முன்னிட்டு அகில இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் கொடைக்கானல் கிளை சார்பில் பொதுமக்களுக்கு ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
வருகின்ற எட்டாம் தேதி சர்வதேச செஞ்சிலுவை தினம் கடைபிடிக்கப்பட உள்ளது. இதை முன்னிட்டு இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய செஞ்சிலுவை சங்கத்தினர் பல்வேறு உதவிகளை பொதுமக்களுக்கு தொடர்ந்து செய்து வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் அகில இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் கொடைக்கானல் கிளை சார்பில் ஊராடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கும்,
ஊரடங்கு காலகட்டத்தில் வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கும் சுற்றுலா வாகன டிரைவர்கள், சலவை தொழிலாளர்கள், தோட்ட பணியாளர்கள் கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், அம்மா உணவகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் என கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்டோருக்கு ரூபாய் 5 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் தலைவர், துணைத்தலைவர் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டதுடன், அரசு ஆர்டிஓ போலீஸ், துணை சூப்பிரண்டு, உள்ளிட்ட முக்கிய அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டு பொது மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கினர். செஞ்சிலுவை சங்கத்தின் செயல்பாட்டுக்கு அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.