சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்திய அளவில் கொரோனாவுக்கு அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் 4வது இடத்தில் இருந்து வருகிறது. இங்கு 3023 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 30 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல கொரோனா சிகிச்சையை சிறப்பாக வழங்கி வரும் தமிழகம் 1,379 பேரை குணப்படுத்தி அதிகமானோரை மீட்டதாக இந்திய அளவில் 2ஆவது மாநிலமாக விளங்குகின்றது.
சென்னையில் நேற்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,458ஆக அதிகரித்துள்ளது.கோயம்பேடு காய்கறி சந்தை மூலமாக 8 மாவட்டங்களில் 321 பேருக்கு தொற்று பரவியுள்ளது. மாநில அரசு கொரோனவை கட்டுப்படுத்த பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகின்றது.
அந்தவகையில் தற்போது சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண்ணொருவருக்கு தற்போது கொரோனா தொற்று பரவியுள்ளது. இது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து கொரோனா நோய் தொற்று அதிகமாகிக் கொண்டே வருவதால் அதனை கட்டுப்படுத்தவேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு இருந்து வருகின்றது.