சென்னை மருத்துவமனையில் படுக்கைகள்தால் நிரம்பியதால் கொரோனா தொற்று இருப்பவர்களை கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,460ஆக அதிகரித்துள்ளது. இவர்கள் சென்னையில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்றைய எண்ணிக்கையை விட இன்று அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் 200க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் இந்த சூழலில் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பும் அபாயம் எழுந்துள்ளது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முழுவதும் படுக்கை வசதிகள் நிரம்பும் வரை காட்டிருக்காமல், 50 அல்லது 70 சதவிகிதம் படுக்கைகள் நிரம்பியவுடன் சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரிகளுக்கு மாற்றுவதற்கு முடிவு செய்யபட்டுள்ளது. அதன்படி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இன்று மட்டும் தற்போது வரை புதிதாக 66 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 500 படுக்கை வசதிகள் உள்ள நிலையில் 250 படுக்கை வசதிகள் நிரம்பியுள்ளது.
இதனால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் உள்ளவர்களை லயோலா கல்லூரிக்கு கொண்டு செல்ல திட்டமிடப்படுள்ளது. இதேபோல மற்ற மருத்துவமனைகளில் உள்ளவர்களையும் கல்லூரிக்கு மாற்ற முடிவு செய்துள்ளனர். இதெற்கென 10க்கும் மேற்பட்ட கல்லூரிகள் தயார் படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக 50ம் வயதுக்கும் குறைவானவர்கள், நீரழிவு நோய் இல்லாதவர்கள் என பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்ய உள்ளனர் என சென்னை மாநகராட்சி தகவல் அளித்துள்ளது.