அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் ட்விட் செய்தததையடுத்து சென்னையில் மே 17 ஆம் தேதி வரை அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா அச்சத்தால் தற்போது ஊரடங்கு அமலில் இருக்கிறது. தமிழகத்திலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதையடுத்து முதலில் மார்ச் 24 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா வைரஸின் தாக்கம் குறையாததால் இரண்டாவது முறையாக மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது..
2ஆம் ஊரடங்கின் போது, தமிழக அரசு ஏழை எளிய மக்களுக்கு பயனளிக்க கூடிய வகையில் ஒரு சிறப்பான நடவடிக்கை எடுத்தது. அதாவது, சென்னையில் இயங்கும் அனைத்து அம்மா உணவகங்களிலும் ஏழை எளிய மக்களுக்கு உணவு இலவசமாக வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.. இதனால் தமிழக அரசின் நடவடிக்கை அரசியல் கட்சியினர் உட்பட அனைவரது பாராட்டையும் பெற்றது..
இந்த சூழலில் தான் இன்றைய நாளில் இருந்து 14 நாட்களுக்கு (17 ஆம் தேதி வரை) 3ஆம் கட்ட , ஊரடங்கு சில தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்டது. அப்போது சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களில் மீண்டும், பழையபடியே உணவுகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஊரடங்கால் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் இருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு இடியாய் அமைந்தது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதில் அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரனும் ஒருவர் ஆவார்..
டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, மே 17 ம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை இலவசமாக உணவு அளிக்கப்பட்டுவந்த அம்மா உணவகங்களில் இன்று முதல் கட்டணம் வசூலிக்க ஆரம்பித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.அம்மா உணவகத்துக்கு நிதி தருவதுபோல நாடகமாடி ஏழைகளின் பசியை அரசியலுக்காகப் பயன்படுத்த நினைத்த அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் இப்போது வாய்மூடி மௌனியாக இருப்பது அந்த இருவரையும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி இருக்கிறது.
இந்த அரசியலை எல்லாம் தள்ளிவைத்துவிட்டு, ஊரடங்கு காலம் முடியும் வரையிலாவது அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்க தமிழக அரசு இன்றே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வருத்தத்துடன் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தான் சென்னையில் மே 17 ஆம் தேதி வரை அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.. இதனால் ஏழை எளிய சென்னை மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.. டிடிவி தினகரன் ட்விட் செய்தபிறகு தமிழக அரசு தங்களது முடிவை மாற்றி மக்களுக்கு ஒரு நல்ல செய்தியை அறிவித்திருக்கிறது.. எது எப்படியோ இலவசமாக மே 17 ஆம் தேதி வரை உணவு வழங்கப்படும் என்று தமிழக அரசின் அறிவிப்பை மக்கள் பாராட்டுகின்றனர்..