தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு 500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,550ஆக உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தை மூலம் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இன்று ஆண்கள் 377 பேரும், பெண்கள் 150 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.
தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸிற்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 32ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 30 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,409ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கடலூரில் இன்று பிறந்த குழந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் பிறந்து 3, 10 மற்றும் 50 நாட்களே ஆன குழந்தைகளுக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.