Categories
மாநில செய்திகள்

இந்தியாவில் கொரோனாவால் 42,836 பேர் பாதிப்பு… மாநில வாரியாக இன்று பாதித்தவர்கள் விவரம்!

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 42,836ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,573 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 83 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,389ஆக அதிகரித்தது. இதுவரை கொரோனா பாதித்த 11,762 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 1,204 பேர் குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வால் கூறியுள்ளார்.

நாட்டில் குணமடைந்தவர்கள் விகிதம் 27.52% ஆக உள்ளது. சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் கொரோனா வேகமாக பரவும் அபாயம் உள்ளது என அவர் எச்சரித்துள்ளார். இதனிடையே ஒடிசாவில் புதிதாக 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஜாஜ்பூரில் நான்கு பேருக்கும், பத்ராக் மாவட்டத்தில் இரண்டு பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஒடிசாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 169 ஆக உள்ளது. 108 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கர்நாடகாவில் நேற்று மாலை 5 மணி முதல் இன்று மாலை 5 மணி வரை 37 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 651ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் நேற்றும், இன்றும் புதிதாக யாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 499 என தெரிவித்தார். குறிப்பாக அதில் தற்போது 34 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில் கொரோனாவில் இருந்து சிகிச்சை பெற்று 461 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் சண்டிகரில் 5 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 102 ஆக உள்ளது.

Categories

Tech |