தமிழகத்தில் கடந்த 10 நாளில் கொரோனா பாதிப்பு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை தமிழக மக்கள் அனைவரையும் தூக்கி வாரிப்போட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,550ஆக உயர்ந்துள்ளது.இன்று ஒரே நாளில் 30 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 1409ஆக உயர்ந்துள்ளது.
அதே போல ஒருவர் உயிரிழந்துள்ளதால் பலியானோர் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளது. ஏப்ரல் 28ஆம் தேதி முதல் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இரு மடங்காக அதிகரித்துள்ளது .கோயம்பேடு சந்தை மூலம் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த தமிழக சுகாதாரத்துறை கொரோனா பரிசோதனை ஆய்வகம் 50ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்தது. சென்னையில் இன்று 266 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டட்டதால் மொத்த எண்ணிக்கை 1,724ஆக உயர்ந்துள்ளது. பிறந்து 3 நாளான ஆண் குழந்தைக்கும், 10 நாளான ஆண் குழந்தைக்கும் கொரோனா கொரோனா உறுதியாகியுள்ளது.