கொரோனா தொற்று தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து கோயம்பேடு சந்தை மூட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,550 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே 266 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,724ஆக அதிகரித்துள்ளது.
தலைநகர் சென்னையில் கடந்த7 நாட்களாக 103, 94, 138, 176, 174 ,203 என்ற எண்ணிக்கையில் மட்டும் 1154பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு கொரோனாவின் கூடாரமாக மாறியுள்ளது. சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தை மூலமாக அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. கோயம்பேடு காய்கறி சந்தை மூலமாக 8 மாவட்டங்களில் 321 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
கடலூரில் அதிகபட்சமாக 129 பேரும், விழுப்புரம் 76 பேரும், சென்னை 63 பேரும், அரியலூர் 43 பேரும், காஞ்சிபுரம் 7 பேரும், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கோயம்பேடு காய்கறி சந்தையை தற்காலிகமாக மூட முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதே போல பூந்தமல்லியில் உள்ள திருமழிசையில் வரும் 7ஆம் தேதி முதல் தற்காலிக சந்தையாக மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.