தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க உத்தரவு போட்டு இருப்பது இல்லத்தரசிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் உள்ள மதுக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மது பிரியர்கள் மது அருந்த முடியாமல் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலை பயன்படுத்தி தமிழகத்தில் நிரந்தரமாக மதுக்கடைகளை மூட வேண்டும். பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தனசேகரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
தள்ளுபடி:
இன்று நீதிபதிகள் வினித் கோத்தாரி, புஷ்பா சத்யநாராயணா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்ற இந்த விசாரணையில்அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி பூரண மதுவிலக்கு என்பது அரசின் கொள்கை முடிவு சார்ந்த விஷயம். அரசின் கொள்கை சார்ந்த முடிவு எடுக்கும் நடவடிக்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று நீதிபதிகளிடம் தெரிவித்தால் அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதிக வருவாய்:
தமிழக அரசுக்கு அதிக நிதி வருவாய் கொடுப்பது மது கடைகள் தான். மதுக்கடைகள் மூலமாக கிடைக்கும் வருவாயை வைத்து தான் தமிழக மாநில அரசு இயங்கி வருகிறது. இந்த நிலையில் நீதிபதி அளித்த இந்த உத்தரவு தமிழக அரசுக்கு ஒரு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தற்போது தமிழக அரசு மே 7ஆம் தேதி வரை மதுக்கடைகளை திறக்க உத்தரவிட்டுள்ளது.
கண்டிஷன்:
மே 7ஆம் தேதி பல கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் தடை செய்யாத பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கலாம். மதுக்கடைகளில் ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது. ஒருவருக்கும் மற்றொருவருக்கு 6 அடி தூரம் இடம் இருக்க வேண்டும். கூடுதல் பணியாளர்களை பணியில் ஈடுபட செய்து கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். கட்டுப்பாடு உள்ள பகுதிகளில் திறக்க கூடாது. அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் தேவைக்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும். பார்கள் திறக்க அனுமதியில்லை.
ஏன் இந்த முடிவு ?
ஊரடங்கால் மாநிலத்தின் பொருளாதாரம் மொத்தமாக சரிந்துள்ள நிலையில் அரசின் நிதி வருவாய் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. மதுக்கடையை நம்பியே தமிழக அரசின் வருவாய் இருந்து வந்த நிலையில் வருவாயை இழந்து தவிக்கும் தமிழக அரசு, அரசின் நிதி தேவைக்காக பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தி இருந்தது. இந்நிலையில் தான் தற்போது மதுக்கடைகளையும் திறக்க உத்தரவிட்டுள்ளது.
கடுப்பில் இல்லத்தரசிகள் :
அரசின் தமிழக அரசின் இந்த உத்தரவினால் பெண்கள் கடுமையான கோபத்தில் இருந்து வருகின்றனர். ஊரடங்கு அமல் ஆகிய 40 நாட்களாக யாரும் வேலைக்கு செல்ல இல்லாத நிலை இருப்பதால் வீட்டிற்கான வாடகை செலுத்த முடியாமல் திணறி வருகின்றனர். ஜூன் ஜூலையில் பள்ளி கல்லூரிகள் திறக்கும் போது கட்டணத்திற்கு என்ன செய்வது என்று விழிபிதுங்கி இருக்கும் இந்த சூழ்நிலையில் அரசின் இந்த உத்தரவு அபாயகரமானது என சமூக ஆர்வலர்கள் பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.