கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் நாகையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்..
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமலில் இருப்பதால் தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால் சிலர் ஊரடங்கை மீறி வீட்டை விட்டு வெளியே வந்து இளைஞர்கள் கிரிக்கெட், கேரம்போர்ட் என சேர்ந்து விளையாடுகின்றனர்..
அதேபோல சில இடங்களில் மறைந்து இருந்து கும்பலாக சேர்ந்து காசு வைத்து சிலர் சூதாடுகின்றனர். இதனால் சமூக இடைவெளி கேள்விக் குறியாகியுள்ளது. இவர்கள் அனைவரும் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் போது தப்பி செல்வதை நாம் பார்த்திருப்போம்..
இந்த நிலையில் நாகை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூர் களத்து மேட்டுத் தெருவைச் சேர்ந்த கேசவன் தனது வீட்டின் அருகே சூதாட்ட கிளப் வைத்து நடத்தி வந்துள்ளார். இதையடுத்து தகவலறிந்த கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் வனிதா தலைமையிலான போலீஸார் அந்த இடத்திற்கு வந்து சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு கேசவன் உள்ளிட்ட 13 பேர் மும்முரமாக சீட்டு விளையாடி கொண்டிருந்துள்ளனர். அதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரையும் கைது செய்த போலீஸார் விளையாட பந்தயமாக வைக்கப்பட்ட 56 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கைப்பற்றினர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது..