Categories
தேசிய செய்திகள்

நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,433 ஆக உயர்வு: 4ம் இடத்தில் தமிழகம்..!

இந்தியாவில் 46 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, முன்னெப்போதும் இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,900 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 195 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 42வது நாளாக அமலில் உள்ளது.

ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46,433 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,568 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 583 பேரும், குஜராத்தில் 319 பேரும், மத்திய பிரதேசத்தில் 165 பேரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 12,727 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 14,541 பேரும், குஜராத்தில் 5,804 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து டெல்லியில் 4,898 பேரும், தமிழகத்தில் 3,550 பேரும், ராஜஸ்தானில் 3,061 பேரும், மத்திய பிரதேசத்தில் 2,942 பேரும், உத்தரபிரதேசத்தில் 2,766 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்புகளின் பட்டியலில் தமிழகம் 4வது இடத்தில் உள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிப்பதாக மத்திய அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுகிறது. மேலும், நாட்டில் உள்ள பச்சை, சிவப்பு, ஆரஞ்சு மாவட்டங்களில் என்னென்ன ஊரடங்கு தளர்வுகளை மேற்கொள்ளலாம் என்பதையும் மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டுள்ளன.

Categories

Tech |