தமிழகத்தில் மதுபானக்கடைகளை திறக்கும் முடிவு மனமுவந்து எடுக்கப்பட்ட முடிவு அல்ல என அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார். மேலும், கள்ள சாராயத்தை ஒழிப்பதற்காகவும், வெளிமாநிலங்களுக்கு சென்று மது வாங்குவதை தடுப்பதற்காகவும்தான் மதுபானக்கடைகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து 40 நாட்களுக்கும் மேலாக டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டு உள்ளன. இந்த நிலையில் ஊரடங்கு மே 17ம் தேதிவரை மேலும் 2 வாரங்களுக்கு நீடிக்கப்பட்ட பொழுது, மத்திய அரசு மதுபான கடைகளை திறக்கலாம் என அனுமதி அளித்திருந்தது. இதையடுத்து, ஊரடங்கு காலத்தில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள போதிலும், தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை.
இருப்பினும், தமிழ்நாட்டை ஒட்டியுள்ள கர்நாடகம், ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் மதுபான கடைகளை திறக்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டது. இதனால் மதுக்கடைகளுக்கு தமிழக எல்லைப்பகுதியில் உள்ள மக்கள் அதிக அளவில் செல்வதால், மாநிலங்களுக்கு இடையேயான மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.
எனவே, வருகிற 7ம் தேதி முதல் (வியாழக்கிழமை) சில நிபந்தனைகளுடன் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்படுவதாக தமிழக அரசு நேற்று அறிவித்தது. எனினும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மதுபான கடைகள் திறக்கப்படமாட்டாது என உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 42 நாட்களாக மது விற்பனை செய்யப்படாததால், அரசுக்கு நாள் ஒன்றுக்கு டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் கிடைத்து வந்த ரூ.90 கோடி முதல் ரூ.100 கோடி வரையிலான வருமானம் நின்று போனது. இதுவரை சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், மதுக்கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது தொடர்பாக அமைச்சர் செல்லூர் ராஜு விளக்கம் அளித்துள்ளார்.