கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், எல்லாம் சரியாகி வருகிறது என்ற தோற்றத்தை உருவாக்க தமிழக அரசு முயற்சிக்கிறது என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக உறுதியாகியுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,550ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் கொரோனா வைரஸால் 266 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,724ஆக உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” அரசியல் உள்நோக்கமற்று, ஆக்கபூர்வமாக செயல்பட்டு மக்களின் உயிரை காக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் சென்னையில் முன்கூட்டியே சிறப்பு அதிகாரியை நியமிக்காமல் நிலைமை கட்டுக்கடங்காமல் போன பிறகு நியமிப்பதால் என்ன பயன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அச்சம் தருவதாக உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் கொரோனா தொற்று அதிர்ச்சியை ஊட்டுவதாகவும் பீதியை ஏற்படுத்துவதாகவும் மாறிக் கொண்டிருக்கிறது என கூறியுள்ளார். முன்பு, 10, 20 ஆக அதிகரித்த எண்ணிக்கை தற்போது, 300, 400 என அதிகரித்து வருவது எங்கே கொண்டு போய் நிறுத்தும் என்று கணிக்க முடியாததாக இருக்கிறது.
ஊரடங்கு, முழு ஊரடங்கு என அரசு கடுமையான நடவடிக்கை எடுப்பது போல் காட்டினாலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிகப்படியாக பரிசோதனைகள் செய்யப்படுவதால் இவை வெளியில் தெரிய வருகிறதா? என கேள்வியும் எழுப்பியுள்ளார். அதேபோல, மாவட்ட வாரியாக எவ்வளவு பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது என்பதை அரசு விளக்கமாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.