Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது!

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.

பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள போதிலும் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் கோயம்பேடு சந்தை கொரோனா பரவும் கூடாரமாக மாறி வருகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் ஒரு சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். முன்னதாக நேற்று ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு இரண்டாவது முறையாக ஆளுநரை சந்தித்து ஆலோசித்தார். மேலும் கொரோனா நோய்த்தொற்று தொடா்பாக தமிழக அரசு இதுவரை எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை ஆளுநா் புரோஹித்திடம் முதல்வா் பழனிசாமி வழங்கியுள்ளார். மேலும் மாவட்ட ஆட்சியர்கள் , மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில் இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,550ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் கொரோனா வைரஸால் 266 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,724ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸிற்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 32ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,409ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |