சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூர் சென்ற மேலும் 68 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடலூரில் இன்று ஒரே நாளில் 68 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 68 பேரும் கோயம்பேட்டில் இருந்து கடலூர் வந்தவர்கள் என அமைச்சர் சம்பத் கூறியுள்ளார். கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 228 ஆக உயர்ந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களில் இதுவரை 26 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,550ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,724ஆக உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து சென்னையில் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களுக்கும் கொரோனா வைரஸ் பரவி உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 160ஆக உயர்ந்துள்ளது. இதில் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்கள் 110 பேர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூர் சென்ற மேலும் 68 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.