தர்மபுரி அருகே சமூக இடைவெளி இல்லாமல் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியதற்கு 7 பேர் தனிமைப்படுத்தப்பட ஒருவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கிராமத்தைச் சேர்ந்த 20 வயது கர்ப்பிணி பெண் ஒருவருக்கு அதே பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டில் வைத்து நேற்றைய தினம் வளைகாப்பு என்பது நடத்தப்பட்டது. இதில் உள்ளூர் வெளியாட்கள் என சுமார் 60 பேர் கலந்து கொண்டு சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நடந்ததாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்ததையடுத்து,
சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட ஆட்சியர் மலர்விழி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், கர்ப்பிணிப் பெண், அவரது கணவர் மற்றும் வீட்டில் இருந்த அவரது உறவினர்கள் என மொத்தம் ஏழு பேரை 14 நாள்கள் தனிமைப் படுத்தி உள்ளனர். மேலும் அவர்கள் வீட்டிற்குள் வீட்டின் முன்பு வெளி ஆள்கள் வராதவரை தடுப்புகள் அமைத்து தேவையான பொருட்களை சமூக இடைவெளியுடன் விநியோகிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்த, அதேபோல் பாப்பரப்பட்டி அருகே உள்ள கானம்பட்டியில் வேறொரு பெண்ணுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டு உள்ளதாகவும் வந்த தகவலையடுத்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்த சூழ்நிலையில், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நிகழ்ச்சியை நடத்தியதாக கூறி முனியப்பன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.