தமிழகத்தில் 711 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஒவ்வொரு வாரமும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி கடந்த 2ம் தேதி வரை தமிழகத்தில் மொத்தமாக உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் குறித்து தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் 711 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருப்பதாக மாவட்ட வாரியாக தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் உத்தரவின் பேரில் ஒவ்வொரு வாரமும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மற்ற நபர்கள் உள்ளே நுழையாத வகையிலும், உள்ளே இருப்பவர்கள் வெளியே செல்லாமல் இருக்கவும் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் மொத்தமாக 188 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளது. இதனால் சென்னையில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. நாள்தோறும் நோய் தொற்று பணிகளை கவனிக்க களப்பணி குழு நியமிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டு கொரோனா தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் நாட்களை 711 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நோய் தொற்றின் தீவிரம் குறைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.