தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இன்று காலை சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு மக்களிடையே தொலைக்காட்சி வாயிலாக முதல்வர் பேச உள்ளார் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பேசிய முதல்வர் பழனிசாமி, சென்னையில் மக்கள் நெருக்கமாக வசிப்பதால் தொற்று எளிதில் பரவுகிறது என கூறியுள்ளார். சென்னையில் 4,000 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளதாகவும், சென்னையில் மண்டல வாரியாக கொரோனா தடுப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனாவை தடுக்க 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
நோய் பரவலை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் கொரோனாவை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் 50 பரிசோதனை மையங்கள் மூலம் நாள்தோறும் 12 ஆயிரம் பேருக்கு பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் அதிக பரிசோதனை மையங்கள் இருக்கின்றன என தெரிவித்தார். தமிழகத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும்,
அரசின் சரியான நடவடிக்கையால் குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தடைசெய்யப்பட்ட பகுதிகளில் 3 வேளையும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. நடமாடும் பரிசோதனை வாகனம் மக்கள் இருக்கும் பகுதிகளுக்கே நேரடியாக செல்கிறது. கபசுர குடிநீரும், நிலவேம்பு கசாயமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படுகிறது. வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுளளது என முதல்வர் பழனிசாமி தகவல் அளித்துள்ளார்.