தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில் மதுபானங்களின் விலையை ரூ.20 வரை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. தமிழகத்தில் 40 நாட்களுக்கும் மேலாக டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டு உள்ளன. இந்த நிலையில் ஊரடங்கு மே 17ம் தேதி நீட்டித்த மத்திய அரசு, அந்தந்த மாநில அரசுகள் சில தளர்வுகளை வழங்க அனுமது அளித்தது. இதையடுத்து டெல்லி, கர்நாடகம், ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் மே 4ம் தேதி முதல் மதுபான கடைகளை திறக்கப்பட்டன.
ஊரடங்கு காலத்தில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள போதிலும், தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் 44 நாடகளுக்கு பின்னர் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதுகுறித்த அறிவிப்பில், மதுக்கடைகளுக்கு தமிழக எல்லைப்பகுதியில் உள்ள மக்கள் அதிக அளவில் செல்வதால், மாநிலங்களுக்கு இடையேயான மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.
எனவே வருகிற 7ம் தேதி முதல் சில நிபந்தனைகளுடன் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்க முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. மேலும் கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவும் நிலையில் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் மதுபானங்களின் விலையை ரூ.20 வரை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபானங்களின் மீது ஆயத்தீர்வை வரி 15% உயர்வால் மதுபானங்களின் விலை அதிகரிப்புசாதாரண வகை 180 மி.லி. மதுபான பாட்டிலின் சில்லறை விற்பனை விலை ரூ.10 கூடுதல் விலைக்கு விற்கப்படும் என அறிவித்துள்ளது. முன்னதாக டெல்லியில் மதுபானங்களின் விலை 60% விலை உயர்வு மற்றும் தெலுங்கானாவில் மதுபானங்கள் 16 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் விலை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.