கொரோனா குறித்து வதந்தி பரப்பியதாக சீதா வைத்தியர் தணிகாசலத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறிவந்த சித்த வைத்தியர் தணிகாசலத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் போலியான சித்த மருத்துவர் என்பது மட்டுமல்லாமல், அவர் ஏற்கனவே கொரோனா நோய்க்கு மருந்து கண்டுபிடித்திருப்பதாக இணையதளத்தில் செய்தி பரப்பினார். இந்த மருந்தை தமிழக அரசாங்கம் ஏற்றுக்கொண்டு கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.
இவர் தற்போது சித்த மருத்துவத்துறையால் போலியான மருத்துவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இணையத்தில் வெளியிட்டது தொடர்பாக, சென்னை காவல் ஆணையரிடம் சித்த மருத்துவத்துறை புகார் ஒன்றை அளித்திருந்தது. அந்த புகாரில், கொரோனாவுக்கு உலகளவில் எந்த ஒரு தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை.
சித்த மருத்துவத்துறையும் என்ன மாதிரியான மருந்துகளை கொரோனாவுக்கு உபயோகப்படுத்த முடியும் என்பது குறித்து ஆய்வு நடத்தி வருகிறது. இந்த நிலையில் தணிகாசலம் போலியான வதந்திகளை பரப்புவதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து தணிகாசலம் எங்கு இருக்கிறார் என்பது குறித்தும், இணையத்தில் செய்தி வெளியிட்ட விவரங்கள் மற்றும் நேரங்கள் ஆகியவற்றை குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து, இன்று கோயம்பேட்டில் பதுங்கியிருந்த அவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். தற்போது எழும்பூர் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு தணிகாசலம் அழைத்துவரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.