தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு 500 + 500 என்ற அளவில் இருந்ததால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அசுரத்தனமாக உயர்ந்தது. இதுவரை தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 33 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளையில்1, 458 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
சிறப்பான சுகாதாரம்:
இந்தியளவில் இறப்பு குறைந்து அதிகமானோரை தமிழகம் குணப்படுத்தியதற்கு அரசின் சிறப்பான சுகாதார நடவடிக்கைகள் பேசப்பட்டது. இந்திய அளவில் அதிகமானோரை குணப்படுத்திய மாநிலங்கள் வரிசையில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருக்கின்றது.
பிரதமர் பாராட்டு:
அதுமட்டுமில்லாமல் தமிழக அரசின் சுகாதார நடவடிக்கையை கண்டு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்தார். தொலைபேசியில் தமிழக முதல்வரிடம் கொரோனா குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்த போது கூட தமிழக அரசின் சுகாதார பணி செயல்பாடுக்கு பாராட்டு தெரிவித்து, தமிழக அரசு அதிகமாக கேட்ட ரேபிட் டெஸ்ட் கிட்டுகளை தருவதாக உறுதி அளித்தார்.
எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி:
தமிழக அரசின் புவனா தடுப்பு நடவடிக்கையில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த ஒவ்வொரு விமர்சனங்களுக்கும் தமிழக அரசு செயல்பாடுகள் மூலம் பதிலடி கொடுத்தது. எதிர்க்கட்சியின் விமர்சனங்கள் முக்கியம் இல்லை, எங்களுக்கு மக்களின் உயிர் தான் முக்கியம். எதிர்க்கட்சிகளிடம் ஆலோசனை கேட்பதற்காக அவர்கள் என்ன மருத்துவர்களா? என்றெல்லாம் தமிழக முதல்வர் தெரிவித்த கருத்துக்கள் மிகவும் வரவேற்பைப் பெற்றன.
ஏன் ? இந்த முடிவு :
இந்த நிலையில்தான் தற்போது தமிழக அரசு எடுத்துள்ள ஒரு முடிவு மிகவும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில் இருக்கிறது. அண்டை மாநிலத்திற்கு சென்று அதிகமானோர் மது வாங்கி வருவதால் தமிழகத்திலும் மதுக்கடைகளை திறக்க உத்தரவு பிறப்பித்தது கடும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக உட்பட பல கட்சிகள் இதற்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திமுகவுக்கு வாய்ப்பு:
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் திமுக வைத்த பல விமர்சனங்கள் எடுபடாத நிலையில், மதுகடைகளை திறக்க அரசு உத்தரவிட்டது, அதிமுகவுக்கு எதிராக திமுக போராட்டம் அறிவிக்கும் நிலைக்கு சென்றுவிட்டது. நாளைக்கு திமுக கூட்டணி கட்சியினர் சார்பாக கருப்பு சின்னம் அணிந்து வீட்டிற்கு வெளியே சமூக விலகலை கடைபிடித்து 5 பேருக்கு மிகாமல் 15 நிமிடம் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நீதிமன்றத்தில் வழக்கு:
இந்த நிலையில்தான் மதுக் கடைகளை திறக்கக் கூடாது. 40 நாட்களாக மதுக்கடைகளை திறக்காததால் மதுவை மறந்து வீட்டில் இருக்கும் மக்களை மீண்டும் மதுவுக்கு அடிமையாக்கும் நிலைக்கு கொண்டு வரும். வீடுகளில் பொருளாதாரம் இல்லை, பணம் இல்லை, மக்கள் வேலை வாய்ப்பை இழந்து இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் மதுக்கடைகளை திறந்து கூடுதல் பிரச்சினையை உருவாக்கும் எனவே அரசு பிறப்பித்துள்ள மதுக்கடையை திறக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ராம்குமார் ஆதித்தன் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது சென்னை உயர்நீதிமன்றம் மதுக்கடைகளை திறக்காமல் இருக்க வேறு வழி இருக்கிறதா ? ஆன்லைன் மூலமாக மது விற்பனையை செய்ய முடியுமா ? மதுக்கடைகளை திறந்த பல மாநிலங்களில் சமூகவிலகல் கடைப்பிடிக்கப்படவில்லை. இதுகுறித்து விஷயங்களுக்கு தமிழக அரசு இன்று மதியம் 2.30க்குள் உடனடியாக பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
வேதனையில் எட்டப்பாடி:
மதுக்கடை திறக்கலாம் என்ற உத்தரவு திமுக அரசியல் செய்யும் அளவிற்கு அமைந்து விட்டது. நம்மோடு கூட்டணியில் இருந்த கட்சிகளே கண்டனம் தெரிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம் என்று இது தமிழக அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. நீதிமன்றத்தில் எந்த மாதிரியான விஷயங்களை சொல்வது, மதுக்கடைகளை திறப்பது என்ற உத்தரவால் இல்லத்தரசிகளுக்கு ஏற்பட்ட கோவத்தை சரி கட்டுவதற்கு என்ன செய்வது ? உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் தற்போது எழுந்துள்ளது. என்ன இருந்தாலும் இது குறித்து நீதிமன்ற உத்தரவை பொருத்துதான் அரசின் நடவடிக்கை இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.