கேரளா மாநிலத்தில் இன்று யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுவரை கேரளாவில் 502 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், 30 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 3 பேருக்கு கேரளாவில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட 3 பேரும் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். சென்னையில் இருந்து வயநாடு வந்த லாரி ஓட்டுநர் மூலமாக 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கேரளாவில் இதுவரை 502 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மேலும் நேற்றுவரை கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 37 ஆக இருந்தது. இந்த நிலையில், இன்று சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 30 ஆக குறைந்துள்ளது. அதேபோல, 468 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மேலும், 4 மாத குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
மதுவிற்பனைக்கு தடை:
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. சூழ்நிலைக்கு ஏற்ப கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகளை திறக்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி பல்வேறு மாநிலங்கள் மதுக்கடைகளை திறந்துள்ளன.
கேரளாவில் ஊரடங்கு காலம் முடைவடையும் மே 17ம் தேதி வரை மதுக்கடைகளை திறக்க அனுமதி வழங்கக்கூடாது என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. போலீசாருக்கு முக்கிய பணிகள் இருப்பதால் மதுக்கடை பாதுகாப்பில் ஈடுபடுத்த முடியாது என்றும் அரசு கூறி உள்ளது.