இன்று திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் அதிமுகவை கண்டித்து போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 771 பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு ஐயாயிரத்து நெருங்கி வருகிறது. இதுவரை 1,516 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 35 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதுமே தமிழகம் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அளவில் அதிகமானால் குணப்படுத்திய மாநிலம் என்ற வரிசையில் 2ஆம் இடத்தில் இருந்தது.
சிறப்பான நடவடிக்கை:
தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையை சிறப்பாக மேற்கொண்டது. அதிக பரிசோதனை மையங்கள் மத்திய அரசிடம் கேட்டுப் பெற்ற தமிழகம், மத்திய அரசு கொரோனா சோதனைக் கருவிகளை ஆர்டர் செய்வதற்கு முன்பாகவே தென்கொரியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் ஆர்டர் செய்தது. தமிழக முதலமைச்சரும் அடிக்கடி ஆய்வு கூட்டங்களை நடத்தி தடுப்பு பணிகளில் எந்த குறையும் இல்லாத அளவுக்கு கொரோனா போரை மேற்கொண்டார்.
பிரதமர் மோடி பாராட்டு:
கொரோனா தடுப்பு பணிகள், ஊரடங்கு என பல்வேறு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது கூட தமிழகத்தில் நடைபெறும் சுகாதார பணிகளை கேட்டறிந்து பாராட்டு தெரிவித்தார். அதோடு இல்லாமல் தமிழகம் அதிகமாக கேட்ட ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை தருவதாகவும் பிரதமர் உறுதியளித்திருந்தார். பிரதமரின் பாராட்டு தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதற்கான சான்றாகவே பார்க்கப்பட்டது.
நவீன் பட்நாயக்_குடன் ஆலோசனை:
கொரோனா தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் பணியில் ஒடிசா மாநிலம் முன்னிலை வகித்து வந்ததையடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். கொரோனவை கட்டுப்படுத்துவது எப்படி? ஊரடங்கு எப்படி நடைமுறைப்படுத்துவது? போன்ற பல்வேறு விஷயங்களை தமிழகத்திற்காக கேட்டறிந்தார். மாநில மக்கள் நலனுக்கு மற்ற மாநில முதல்வர்களுடன் பேசியது தமிழக அரசின் முன் மாதிரி நடவடிக்கையாக பார்க்கப்பட்டது.
திமுக விமர்சனம்:
கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசு மீது எதிர்க் கட்சியான திமுக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து. அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும், அரசு மெத்தனமாக செயல்படுகின்றது, மக்களை பார்க்கவில்லை என்று அதிமுக அரசின் மீது விமர்சனங்களை அள்ளி எறிந்த போதெல்லாம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நல்ல பதிலடியை திருப்பிக் கொடுத்தார். செயல்பாடுகளால் திமுக விமர்சனக்ளுக்கு செக் வைத்து அசத்தினார்.
எடப்பாடி பதிலடி:
அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுவதற்கு அனைவரும் டாக்டர்களா? இது மருத்துவர்களிடம் தான் பேசவேண்டும் . இங்கு அரசியல் கட்சியினர் அரசியல் செய்வதற்கு இடமில்லை. எங்களுக்கு மக்களின் உயிர் தான் முக்கியம். சும்மா சும்மா அறிக்கை விடாதீங்க. இங்க ஒரு குறை, அங்க ஒரு குறைன்னு எதனாலும் குற்றம் சொல்லி இப்படி நேரத்திலையும் எதிர்க்கட்சி அரசியல் செய்வது சரியில்லை என்று திமுக விமர்சனத்திற்கும் பதிலடி கொடுத்து வந்தார்.
வாய்ப்பு வழங்காத எடப்பாடி:
அதே போல எதிர்க்கட்சியான திமுகவும் சும்மா விடவில்லை. அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்க வேண்டும். ரேபிட் டெஸ்ட் கிட் விலை என்னவென்று சொல்ல வேண்டும். அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்திக்காதது ஏன்? மத்திய அரசிடம் அதிக நிதியை கேட்டு பெற்றால் என்ன ? என்று மக்கள் நலனுக்காக தன்னுடைய பணியை தொடர்ந்து கொண்டே இருந்தது.திமுக தலைவர் மு க ஸ்டாலின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை காணொளி காட்சி மூலம் நடத்தி எதாவது சொல்லிக் கொண்டே இருந்தாலும், எந்த ஒரு விமர்சனத்திற்கும் சளைக்காமல், அரசியல் செய்ய இடம் கொடுக்காமல் ஆக்கபூர்வமான பணியை செய்து கொண்டே இருந்தது.
கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திய திமுக:
இந்த நிலையில்தான் தமிழக அரசு இன்று முதல் மதுக்கடைகள் இயங்கும் என்று உத்தரவை பிறப்பித்தது திமுகவுக்கு வாய்ப்பை தேடி கொடுத்தது. இதற்கு அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதுவரை அரசின் மீது நியாயமான விமர்சனங்களை வைக்க வழி இல்லாமல் இருந்த திமுகவிற்கு இது ஒரு அருமையான வாய்ப்பாக அமைந்தது. இதைவைத்து இன்று திமுக போராட்டம் அறிவித்துள்ளது. திமுக கூட்டணி கட்சிகள் அனைத்தும் கருப்பு சின்னம் அணிந்து வீட்டிற்கு வெளியே நின்று கொரோனா ஒழிப்பதில் தோல்வி அடைந்துவிட்ட அதிமுக அரசைக் கண்டிக்கிறோம் என முழக்கமிட்ட அழைப்பு விடுத்துள்ளது.
திணறும் அதிமுக:
கொரோனா தடுப்பு பணிகளை எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டு இருந்த நிலையில் இப்படி ஒரு முடிவால் அதிமுக தற்போது திணறி வருகிறது. தங்கள் கூட்டணியில் உள்ள பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளும் அதிமுகவை கடுமையாக விமர்சித்தன. அதுமட்டுமல்லாமல் மக்கள் அனைவரும் வேலை இல்லாமல் வீட்டில் முடங்கி இருக்கின்ற நிலையில் இப்படி மதுக்கடைகளை திறந்து விடுவதால் வீட்டில் கூடுதலாக பிரச்சனை மேலோங்கும் என்று இல்லத்தரசிகள் அதிமுக அரசின் மீது கடுமையான கோபத்தில் இருக்கின்றனர்.
இதனை வைத்துக்கொண்டு அரசின் மீது கோபத்தை காட்ட மக்கள் அனைவரும் திமுக சொல்லுவதை போல வீட்டிற்கு வெளியே 15 நிமிடங்களை நின்று முழக்கமிட்டல் இவ்வளவு நாட்களாக இருந்து வந்த அனைத்து பெயரும் திமுகவுக்கு சாதகமாகி விடுமே, அரசை விமர்சனம் செய்யும் அளவிற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி விட்டதை திமுக கச்சிதமாகப் பயன்படுத்தி விட்டதே என்று அதிமுக நிர்வாகிகள் முனங்கி வருகின்றனர்.