கணவனுக்காக மனைவிமார்கள் மது வாங்க வரிசையில் நின்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் மூன்றாம் தேதிக்கு பின் தளர்வுகளுடன் தனிகடைகள் நாடு முழுவதும் திறக்கப்பட்டு வருகின்றன. பல மாநிலங்களில் மதுபான கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. மதுபானக் கடைகளிலும், அரசு விதிமுறைகளின்படி கொரோனாவை தடுக்கும் விதமாக சமூக விதிகளை கடைபிடித்து பொதுமக்கள் மதுபானங்களை வாங்கி செல்ல வேண்டும் என அரசு அறிவுறுத்தியிருந்தது.
கடை திறக்கப்பட்ட முதல் நாளே மது பிரியர்கள் மிக நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கி சென்றனர். அரசு 70 சதவிகிதம் விலையை உயர்த்தி அறிவித்த போதிலும், கூட்டம் குறைந்தபாடில்லை. இதனிடையே டெல்லியில் குடிமகன்கள் நீண்ட வரிசையில் மதுபானங்களை வாங்கிக் கொண்டிருந்த கூட்டத்தில் பெண்களின் நடமாட்டம் கண்டறியப்பட்டது.
அவர்களும் சமூக இடைவெளியை கடைபிடித்து வரிசையில் நின்று மதுபாட்டில்களை வாங்கிச் சென்றுள்ளனர். வரிசையில் நின்ற பெண் ஒருவரிடம் செய்தியாளர்கள் பேசுகையில், எனது கணவர் உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருக்கிறார். அவருக்கு பதிலாக நான் மதுபானம் வாங்க வந்துள்ளேன் என்று அவர் கூறினார். இவர் அளித்த இதே பதிலையே பல பெண்கள் அளித்துள்ளனர். கணவனுக்காக பெண்கள் மதுபான கடைகளில் மது வாங்க வந்த செய்தி சமூக வலைதளங்களில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.