சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 419 ஆக உயர்ந்துள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இந்த வார துவக்கத்தில் 357 ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 419 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,829ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் கொரோனா வைரஸால் 324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,328 ஆக உயர்ந்துள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் உட்பட பல்வேறு பகுதிகளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபர் வசிக்கும் பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. அப்பகுதி முழுவதும் மாநகராட்சி மற்றும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
அப்பகுதி மக்கள் குடியிருப்பு பகுதியை விட்டு வெளியே வரவோ, வெளியாட்கள் உள்ளே நுழைவோ அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் தற்போது, ராயபுரம், தண்டையார்பேட்டை, திரு.வி.க.நகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மண்டலங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
கடந்த 2 வாரங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. கடந்த திங்கள் அன்று அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 80 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்டன. திரு.வி.க நகர் மண்டலத்தில் 70 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்டன. தண்டையார்பேட்டையில் 38 பகுதிகள், கோடம்பாக்கம் மண்டலத்தில் 32 பகுதிகள், தேனாம்பேட்டையில் 37 பகுதிகள் என மொத்தம் 357 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 419 ஆக அதிகரித்துள்ளது.