Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தாங்குமா தமிழகம் ? வெகுண்டெழு தமிழகமே, வேறு தலைமை தேடு – கமல்

தமிழகத்தில் இன்று மதுக்கடை திறக்கப்பட்டதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் சென்னை தவிர்த்து இன்று முதல் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. தமிழக அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. அதிமுக கூட்டணியில் இருக்கும்  தேமுதிக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் இன்று கருப்பு சின்னம் அணிந்து கண்டன போராட்டம் நடத்தியாது.

இதனையடுத்து மக்கள் நீதி மைய்யம் சார்பாக கண்டன அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஒரு வைரஸ் கிருமிக்கு இருக்கும் உயிர்வாழும் ஆசைகூட, தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்காது என்ன திண்ணமாக நம்பும் ஒரு அரசு நமக்கு வாய்ந்தது ஏன்? ஓட்டுக்கு காசு வாங்கி, 5 வருடம் நம் வாழ்வை இவர்களுக்கு குத்தகைக்கு விட்டோமோ அதன் விளைவுதான்.

பஞ்சத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டில், மதுக்கடைகளை திறந்து விட்டால் மக்களின் கவனம் திரும்பி விடும் என நம்பும் அரசு பெயர் ”அம்மாவின் அரசா” ? தாயுள்ளம் கொண்டோர் அனைவருக்கும் அவமானமல்லவா அது ?

இலவசமாக எத்தனை தாலிகள் தந்தாலும், வேலையில்லாத குடிகாரன் வீட்டு தாலி பறிக்கப்பட்டு, அடகுக்கடைக்கு போகும் பின் அரசு நடத்தும் சாராயக் கடைகள் மூலம் அரசுக்கே வந்து சேரும் என்று தெரியும் தமிழ்நாட்டை ஆள்பவர்களுக்கு.

ஓட்டுக்கு இத்தனை ஆயிரம் விலையில்லா பொருள் இத்தனை ஆயிரம் என 5 வருடத்திற்கு ஏழைத் தமிழர்களை குத்தகைக்கு எடுத்த அரசு, இன்று ஆட்சி கவிழும் தருவாயில் வசூல் வேட்டையில் இறங்கி இருக்கிறது. ஆண்டவர்களும், ஆளுபவர்களும் இந்த வசூல் கொள்ளையில் பங்குதாரர்கள் என்பது ஊரறிந்த ரகசியம்.

இன்று சொல்கிறேன்.

இந்த அரசு செய்யும் தொடர் அபத்தங்களை நிறுத்தாவிட்டால் சுனாமி கொண்டுசென்ற உயிர்களை விட அதிகமான உயிர்களை இந்த நோய் காலத்தில், அரசு தற்போது திறந்து விட்டுள்ள சாராய ஆறு கொண்டு செல்லும்.அப்படி ஏதும் நடந்தால், தமிழகத்தின் தலைமை, கொலைக்குற்றத்தை ஏற்று பதவி விலகவா போகிறது?

சிறைக் அனுப்பினாலும் தொடரும் இந்த ஊழல் சங்கம், கொரோனாவை விட அதிக தமிழ் மக்களை கொல்லும்.நோய்த் தொற்றுக்கு தப்லீக் ஜமாத்தை மட்டும் காரணம் காட்டியா பலர்,  கோயம்பேடு, நோய் விநியோக நிலையமாக மாறியதற்கு, ஆளும் அரசியல் வியாபாரிகளை தவிர, வேறு யாரைக் குற்றம் சாட்ட முடியும்.

கிராமங்களெங்கும் டாஸ்மாக் வாசலில் திருவிழாக் கூட்டம்.

கொள்ளைநோய் பக்கம், அரசின் தொடர் கொள்ளை இன்னொரு பக்கம்.

தாங்குமா தமிழகம் ? வெகுண்டெழு தமிழகமே, வேறு தலைமை தேடு.

வெள்ளையரை வெளியேற்றிய நமக்கு, இந்த கொள்ளையரையும் வெளியேற்றும் காலம் நெருங்கி விட்டது.

உங்கள் நாயகனாகிய கமலஹாசன்

அரசுக்கு சிறு குறிப்பு:

இன்றும் தாமதமாகி விடவில்லை. நேர்மை குரலுக்கு செவி சாய்த்தால், மக்கள் இருக்கும் நியாயமான கேள்விகளுக்கு, நேர்மையான பதிலை இந்த அரசு அளித்தால், நடக்கும் இந்த ஆட்சி முடிவு, அசிங்கமானதாக இல்லாமல் தப்பிக்க சில ஒருசில வாய்ப்பு இருக்கிறது.

உண்மையில் இது யாருக்கான அரசு ?

இதுவரை கிடைத்த தடயங்களை பார்க்கையில் மனசாட்சி என்று ஒன்று இது உங்களுக்கு இருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை இருந்தால் அதை தொட்டு சொல்லுங்கள். இல்லையேல் மேலிடத்துக்கு கேட்டுச் சொல்லுங்கள் என்று கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |