தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி தன்னார்வலர் ஒருவர் காந்தி வேடமிட்டு தனியாக போராட்டம் நடத்தினார்.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே தங்களது வீடுகளை விட்டு வெளியேறும் சூழ்நிலை யில் இருந்து வந்தனர்.
இந்நிலையில் 43 நாட்களுக்குப் பிறகு இன்று மதுபான கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனை அமோகமாக நடைபெற்றது. திறந்த முதல் நாளே ஆங்காங்கே கூட்டம் கூடுவது, வீட்டில் சிறிது சேமிப்பில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு மது வாங்க செல்வது போன்ற அடாவடியான நடவடிக்கைகளை குடிமகன்கள் மேற்கொண்டுள்ளனர்.
அதேபோல் குடும்ப வன்முறைகளும் இன்று ஒரே நாளில் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு பலரும் மீண்டும் மீண்டும் மதுபானக்கடைகளை மூடக்கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அந்தவகையில்,
நாமக்கல் மாவட்டத்தில் செல்லபட்டியைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் காந்தி வேடமிட்டு அங்கு உள்ள பொதுபகுதியில் அமர்ந்து மதுபான கடைகளை மூடுமாறு கோரிக்கை வைத்து கோஷங்கள் இட்டு போராட்டம் நடத்தி வந்தார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்தனர்.
காவல்துறை அதிகாரிகள் அவரை காவல் நிலையம் அழைத்து செல்லும்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்து அவர் இவ்வாறு கூறினார். அதில், மது விற்பனையால் குடும்ப வன்முறை அதிகரிக்கும். இதனால் பல்வேறு குடும்பங்கள் சேமித்த பணத்தை செலவழித்து விட்டு வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் சூழ்நிலை ஏற்படும். எனவே தமிழக அரசு இதனை கருத்தில் கொண்டு மதுபான கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.