50% மாணவர்களுடன் பள்ளிகள் செயல்படலாம் என மத்திய அரசுக்கு என்சிஇஆர்டி பரிந்துரை செய்துள்ளது.
ஊரடங்கு காலம் முடிந்த பின்பு பள்ளிகளை எப்போது திறப்பது ? பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை எவ்வாறு நடத்துவது ? எவ்வாறு வகுப்புகளில்மாணவர்களுக்கு பாடம் நடத்துவது ? என ஆராய்ந்து புதிய வழிகாட்டுதலை வழங்க கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டு இருந்தது.
இதனடிப்படையில் என்சிஆர்டி மேற்கொண்ட குழு பரிந்துரையை மத்திய மனிதவளமேம்பாட்டு அமைச்சகத்திடம் வழங்கியுள்ளது. அதில், நாடு முழுவதும் ஊரடங்கு முடிந்த பிறகு பள்ளிகளில் 50 சதவீத மானவர்களைக் கொண்டு வகுப்புகளை தொடங்கலாம்.
ஒரு நாள் விட்டு ஒரு நாள் சுழற்சி முறையில் 50 சதவீத மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும்.
ஒரு நாளில் பள்ளிக்கு வராத மீதமிருக்கும் 50 மாணவர்களுக்கு ஆன்-லைன் மற்றும் யூடியூப் மூலம் வகுப்புகள் நடத்தலாம்.
இதேபோன்று தேர்வுகளையும் சமூக இடைவெளி பின்பற்றி நடத்த வேண்டும் என என்சிஇஆர்டி பரிந்துரைத்துள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் மத்திய அரசுக்கு கொடுக்கப்படும் பரிந்துரை மீது வரும் 11ம் தேதி கலந்து ஆலோசித்து உரிய முடிவை அறிவிக்க இருக்கிறது. என்சிஇஆர்டி அளித்த பரிந்துரைகள் முழுமையாக மத்திய அரசால் ஏற்கப்படும் என்று என்சிஇஆர்டி இயக்குனர் சேனாபதி நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இதனால் அடுத்த வாரத்தில் இருந்து இதற்கான அறிவிப்புகள் தொடர்ச்சியாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.