மதுக்கடைகளை திறக்கும் உத்தரவை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் வழக்கு தொடர்ந்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு டாஸ்மாக்கை திறக்க முடிவு செய்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தமிழக உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கடந்த 6ம் தேதி இந்த வழக்கில் தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க தடை இல்லை என உயர்நீதிமன்றம் அதிரடி அறிவித்துள்ளது. சமூக விலகல் போன்ற பாதுகாப்பு வழிமுறைகளுடன் டாஸ்மாக் கடைகள் செயல்படலாம். ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு ஒரு பாட்டில் தான் விற்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் டாஸ்மாக் கடைகளை திறக்கலாம் என கூறப்பட்டது. மேலும் தமிழகத்தில் ஆன்லைனில் மதுபானங்கள் விற்பனை செய்யவும் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இதனால் தமிழக அரசு அறிவித்தபடி சென்னையை தவிர அனைத்து இடங்களிலும் நேற்று டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. மேலும் தமிழகத்தில் நேற்று டாஸ்மாக் திறந்த முதல் நாளில் ரூ.170 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. இந்த நிலையில் மதுக்கடைகளை திறக்கும் உத்தரவை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் வழக்கு தொடர்ந்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டிய நிலையில், மதுவால் பாதிப்பு ஏற்படும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
மருத்துவர்கள்,காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து போராடிக் கொண்டு இருக்கின்றனர்.நடுத்தர மக்கள் வீட்டில் கட்டுண்டு இருக்கின்றனர்.ஏழைகள் வாழ வழியின்றி தவிக்கின்றனர். தற்போது டாஸ்மாக் திறந்து விட்டு, ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா? #தாங்குமாதமிழகம்
— Kamal Haasan (@ikamalhaasan) May 8, 2020
முன்னதாக மதுக்கடை திறப்பு குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள கமலஹாசன், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மருத்துவர்கள்,காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து போராடிக் கொண்டு இருக்கின்றனர். நடுத்தர மக்கள் வீட்டில் கட்டுண்டு இருக்கின்றனர். ஏழைகள் வாழ வழியின்றி தவிக்கின்ற இந்த நிலையில் டாஸ்மாக் திறந்து விட்டு, ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா? என ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.