Categories
மாநில செய்திகள்

இந்த காரணங்களுக்காக வெளியூர் செல்பவர்களுக்கு உடனடியா பாஸ் கொடுங்க…. பரிந்துரை செய்த ஐகோர்ட்

மரணம் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக வெளியுர் செல்ல உடனடியாக பாஸ் வழங்குவது தொடர்பாக பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. ஒரு மணி நேரத்தில் பாஸ் வழங்க உத்தரவிடகொரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிடபட்டுள்ளது.

வழக்கு விவரம்:

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் திருமணம், மருத்துவம் மற்றும் துக்க நிகழ்ச்சிகள் போன்ற காரணகளுக்காக வெளியூர் செல்பவர்களுக்கு அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த இ-பாஸ்கள் மின்னணு முறையில் வழங்கப்பட்டு வருகிறது. இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கப்படும் போது, மிக தாமதமாக வழங்கப்படுவதாக குற்றசாட்டு எழுந்தது.

இது தொடர்பாக, திருச்செந்தூரை சேர்ந்த ராம் குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அந்த மனுவில் திருமணம் உள்ளிட்ட விழாக்கள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு நடத்தப்படுவதால், முக்கூட்டியே அதற்கு இ-பாஸ் வழங்கக்கோரி விண்ணப்பிக்க முடியும். ஆனால் எதிர்பாராமல் நிகழக்கூடிய மரணங்கள், உடல் நலக்குறைவுகளுக்கு அனுமதி சீட்டு கேட்டு விண்ணப்பிக்கும் போது, அவை தாமதமாக வழங்கப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இ-பாஸ் வழங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறைகள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே செயல்படுவதாகவும், இதனால் அவசர முன்பதிவுக்காக ஒரு நாள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது என மனுவில் குறிப்பிட்டுள்ளார். எனவே, மருத்துவம் மற்றும் மரணம் உள்ளிட்ட காரணங்களுக்காக அனுமதி கேட்டு அளிக்கப்படும் விண்ணப்பங்களை 1 மணி நேரத்தில் முடிவெடுத்து சம்மந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. 24 மணி நேரமும் அனுமதி சீட்டு வழங்கும் பணி நடைபெற வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசுக்கு பரிந்துரை:

இந்த வழக்கு நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. துக்க நிகழ்ச்சி மற்றும் மருத்துவ காரணங்களுக்காக வெளியூர் செல்ல அனுமதி கோரும் விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலிக்க வேண்டும் என்று அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக 11ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என கூறி வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.

Categories

Tech |