Categories
மாநில செய்திகள்

மின்சார சட்ட திருத்தம் : இலவச மின்சாரம் ரத்து செய்வதை தமிழக அரசு ஏற்று கொள்ளாது – அமைச்சர் தங்கமணி!

மின்சார சட்ட திருத்தத்தில் இலவச மின்சாரம் ரத்து உள்ளிட்ட அம்சங்களை தமிழக அரசு ஏற்று கொள்ளாது என அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

மத்திய அரசு மின்சார சட்ட திருத்த மசோதா – 2020 ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாவில் மாநில மின்சார வாரியங்களை பிரித்து வெறும் விநியோக நிறுவனங்களாக மாற்றும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. நாட்டின் உற்பத்தி செய்த மின்சாரத்தை முழுக்க முழுக்க தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் உரிமையை இந்த மசோதா அளிக்கிறது.

மேலும் மின் நுகர்வோர்களிடம் கட்டணம் வசூலிக்கும் உரிமையும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும். இதனால் மின்சாரக் கட்டணத்தைத் தீர்மானிக்கும் அதிகாரமும் தனியாருக்குச் சென்று விடும். இதனால் மின் கட்டணமும் உயரும் ஆபத்து ஏற்படும். மேலும் இந்த மசோதா நிறைவேற்றப்படுமானால் இதுவரை தமிழகம் மற்றும் சில மாநிலங்களிலும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் அபாயம் எழுந்துள்ளது.

இதற்கு தமிழக எதிர்க்கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். விவசாயிகளுக்கான இலவச மின்சாரம், ஏழைகளுக்கு நூறு யூனிட் இலவச மின்சாரம் திட்டங்களுக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் மத்திய அரசின் புதிய மின்சார திருத்தச் சட்டத்தை தமிழக அரசு எதிர்க்க வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, மத்திய அரசின் மின்சார திருத்தச் சட்டம் குறித்து தமிழகத்தின் மின் கொள்கையின் கருத்துகளை மத்திய அரசிடம் கூறியுள்ளோம் என தெரிவித்துள்ளார். மத்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதா – 2020ல் இலவச மின்சாரம் ரத்து உள்ளிட்ட அம்சங்களை தமிழக அரசு ஏற்று கொள்ளாது என்றும் நாடாளுமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள் உரிய குரல் கொடுத்து தமிழகத்தின் உரிமையை பெற்றுத் தருவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |