பிளாஸ்மா பரிசோதனை சிகிச்சை 21 மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ள 5 மருத்துவமனைகள், குஜராத்தில் 4, தமிழகம், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 2 மருத்துவமனைகள், பஞ்சாப், தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு மருத்துவனைக்கு பிளாஸ்மா சிகிச்சை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் லாவ் அகர்வால் கூறியதாவது, ” தகவல்களை ஆராய்ந்த பின்னர், சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பசுமை மண்டலங்கள் அடங்கிய பட்டியல் மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்படும். மக்கள் எதை செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்பதை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப நடந்து கொண்டால், கொரோனா பாதிப்பு உச்சமடைவதில் இருந்து நாம் தப்பிக்கலாம்.
போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமலும், அதனை பின்பற்றாமல் இருந்தால், பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. ஊரடங்கு தளர்வு மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வருகை பற்றி பேசும் போது, நாமும் வைரஸுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
வைரஸுக்கு எதிரான தடுப்பு வழிகாட்டுதல்கள் நடத்தை மாற்றங்களாக செயல்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார். மேலும், பிளாஸ்மா தெரபி சிகிச்சைக்கு இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் 21 மருத்துவமனைகளில் இந்த சிகிச்சையை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.