2019 ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் மார்ச் 23ஆம் தேதி (நாளை) துவங்கவுள்ள நிலையில், எங்கள் நாட்டில் அந்த ஐ.பி.எல் போட்டியை ஒளிபரப்ப மாட்டோம் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
ஏற்கனவே 2019 உலக கோப்பை போட்டி மே -30ம் தேதி தொடங்க உள்ள நிலையில் இந்தியா- பாகிஸ்தான் விளையாடுவது தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்தை தெரிவித்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒப்பந்தத்தின் படி இந்தியா பாகிஸ்தானுடன் விளையாட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் 2019 ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி நாளை தொடங்க உள்ள சமயத்தில் , பாகிஸ்தான் தங்கள் நாட்டில் நடைபெற்ற சூப்பர் லீக் தொடரின் போது இந்திய நிறுவனங்களும், இந்திய அரசும் அணுகியவிதம் முறையற்ற செயலாக இருந்ததாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 2019 ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை தங்கள் நாட்டில் ஒளி பரப்ப முடியாது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சரான ஃபாவத் அகமது சவுத்ரி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளை காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த தாக்குதலைக் காரணம் காட்டி டி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஒளிபரப்ப முடியாது என்று மறுத்தது குறிப்பிடத்தக்கது.