Categories
மாநில செய்திகள்

திருமழிசையில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன? அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு!

திருமழிசை சந்தையில் கொரோனா தடுப்புக்காக எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கை என்ன? என விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கோயம்பேடு தொடர்புகள் மூலம் சென்னையில் உள்ள பகுதிகளிலும், பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னையில் கோயம்பேடு தொடர்புடைய மேலும் 15 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் கோயம்பேடு தொடர்பு மூலம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 221 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அரியலூர், விழுப்புரம் , கடலூர் என மற்ற மாவட்டங்களில் மொத்தமாக 600க்கும் மேற்பட்டோருக்கு கோயம்பேடு சந்தை வாயிலாக கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

இதனால் கோயம்பேடு சந்தையானது தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில் திருமழிசையில் தற்காலிக சந்தை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 100க்கும் மேற்பட்ட கூடாரகங்கள் அமைக்கப்பட்டு சிமெண்ட் தரைத்தளம், மின் இணைப்புகள் கொடுக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. தண்ணீர் வசதி, கழிவறை, தாங்கும் வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. மே 10ம் தேதி முதல் திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை செயல்படும் என சிஎம்டிஏ தெரித்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் திருமழிசையில் காய்கறி சந்தை அமைப்பது குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வியாபாரிகள் நல சங்க துணை தலைவர் ஜெயசீலன் தொடர்ந்த வழக்கில், கோயம்பேட்டில் உள்ள வியாபாரிகளுக்கு முழுமையான பரிசோதனைகள் மற்றும் பாதுகாப்பான நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னர் தான் திருமழிசையில் வியாபாரிகளை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதா? என முழுமையாக தெரியாத நிலையில் திருமழிசைக்கு சந்தையை மாற்றுவதால் கொரோனா பரவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்ற அச்சம் எழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், கோயம்பேடு அங்காடியை சேந்தவர்களும் அதிகளவில் பரிசோதனை செய்ய வேண்டும். கொரோனா அறிகுறி இருப்பவர்களை தனிப்படுத்துமாறு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்யநாராயண அமர்வில் விசாரித்தனர். அப்போது திருமழிசை தற்காலிக காய்கறி அங்காடியில் கொரோனா தடுப்புக்காக எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கை என்ன? என விரிவான அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Categories

Tech |