வெளிமாநில தொழிலாளர்களுக்கான ரயில் கட்டணம் மாநில பேரிடர் நிதியில் இருந்து செலவிடப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ரயில் கட்டணம் செலுத்தமுடியாத வெளிமாநில தொழிலாளர்களுக்கு அரசே கட்டணம் செலுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வெளிமாநிலத்தவர்களை சொந்த ஊர் அனுப்புவது தொடர்பான அரசாணையில் திருத்தும் செய்து புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வீட்டில் உரிய வசதி இல்லாத தொழிலாளர்கள் அரசு பாதுகாப்பில் தங்கவைக்கப்படுவார்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. தற்போது 42வது நாளாக அமலில் உள்ளது. இதன் காரணமாக, பிற மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இந்த நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அனுமதி அளிக்கப்படுவதாகவும், அவர்களைப் பேருந்து மற்றும் சிறப்பு ரயில்கள் மூலம் அனுப்பி வைக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்த நிலையில், சொந்த மாநிலங்களுக்கு செல்ல 1 லட்சம் தொழிலாளர்கள் விண்ணப்பித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. மேலும், முன்னதாக வெளிமாநில தொழிலாளர்களை சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கும் செலவை அந்தந்த மாநில அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு கேட்டுக்கொண்டது. இந்த நிலையில், ரயில் கட்டணம் செலுத்த பணம் இல்லையென்றால், அந்த செலவை தமிழக அரசே ஏற்கும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல, தொழிலாளர்களின் சொந்த மாநிலங்கள் செலவை ஏற்கவில்லை எனில் தமிழக அரசே கட்டணம் செலுத்தும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.