Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

தமிழகத்தில் டாஸ்மாக் திறப்பது தொடர்பான வழக்கு : பாமக மற்றும் சில அமைப்புகள் கேவியட் மனுக்கள் தாக்கல்!

டாஸ்மாக் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் பாமக மற்றும் சில அமைப்புகள் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் தமிழக உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 6ம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க தடையில்லை என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனால் தமிழக அரசு அறிவித்தபடி சென்னையை தவிர 7ம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டது.  மே 7 மற்றும் 8ம் தேதி கடைகள் திறந்திருந்த நிலையில் தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் ரூ.294 கோடிக்கு மது விற்பனையாகிருந்தது. இதன் சூழலில் மதுக்கடைகள் திறக்க அனுமதி அளித்ததற்கு எதிராக மக்கள் நீதி மய்யம், மேலும் சில வழக்கறிஞர்களும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டதால் தமிழகத்தில் ஊரடங்கு நிறைவடையும் வரை டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. ஆன்லைன் மூலம் மட்டுமே விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. மதுக்கடைகளை மூடவேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவால் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்ற கருத்தையும் என்றும் மனுவில் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில் பாமக மற்றும் சில அமைப்புகள் சார்பாக இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தங்கள் தரப்பு கருத்தையும் கேட்டறிந்த பின்னர் தான் முடிவெடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்த வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |