சென்னை அடுத்த திருமழிசையில் தற்காலிக சந்தை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்து வருகிறார்.
தமிழகத்தில் கோயம்பேடு தொடர்புகள் மூலம் சென்னையில் உள்ள பகுதிகளிலும், பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் 27% கோயம்பேடு தொடர்புடையவர்கள் என மாநில சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கோயம்பேடு சந்தை தொடர்பு மூலம் 1,589 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் மட்டும் கோயம்பேடு தொடர்பு மூலம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 200க்கும் மேலாக அதிகரித்துள்ளது.
இதனால் கோயம்பேடு சந்தையானது தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில் திருமழிசையில் தற்காலிக சந்தை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 100க்கும் மேற்பட்ட கூடாரகங்கள் அமைக்கப்பட்டு சிமெண்ட் தரைத்தளம், மின் இணைப்புகள் கொடுக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. தண்ணீர் வசதி, கழிவறை, தாங்கும் வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. மே 10ம் தேதி முதல் திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை செயல்படும் என சிஎம்டிஏ தெரித்துள்ளதாக தகவல் வெளியானது.
இதனிடையே கோயம்பேடு சந்தை இடமாற்றம் தொடர்பாக நேற்று முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். திருமழிசையில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த நிலையில் திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் நடக்கும் பணிகளை பார்வையிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்து வருகிறார். அவருடன் துணை முதல்வர் ஓபிஎஸ், கோயம்பேடு அதிகாரிகள், மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் ஆய்வு செய்து வருகின்றனர். சந்தையில் தொற்று உருவாவதை தடுக்கும் நடவடிக்கைகள் என்னென்ன எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் கேட்டறிந்து வருகின்றனர் .