தொழிற்சாலைகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மே 17வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மே 3ம் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், விசாகப்பட்டினத்தில் மே 7ம் தேதி தனியார் தொழிற்சாலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டது. இதில்12 பேர் உயிரிழந்தனர். இதன் எதிரொலியாக தொழிற்சாலைகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில்,
- ஊரடங்குக்குப் பின் பாதுகாப்பு நெறிமுறைகளை உறுதி செய்த பின்னரே உற்பத்தி தொடங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
- நீண்ட நாட்களாக ஆலைகள் மூடப்பட்டிருப்பதால் திறக்கும் போது ரசாயனம் உள்ளிட்ட பொருட்களை கையாளுவதில் கூடுதல் கவனம் தேவை.
- தொழிலாளர்களின் பாதுகாப்பை கருதில் கொண்டு அணைத்து ஆலைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதலில் சோதனை ஓட்டமாகத் தான் தொழிற்சாலை தொடங்க வேண்டும்.
- அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் உறுதி செய்த பின்னர் தான் சோதனை ஓட்டம் நடத்த வேண்டும்.
- மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னரே தொழிலாளர்களை அனுமதிக்க வேண்டும். ஏதேனும் அறிகுறி இருந்தால் அவர்களை பணிக்கு அமர்த்தக்கூடாது.
- பணியின் போது ஏற்படும் விபத்து குறித்து தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
- ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு ஒருமுறை கிருமிநாசினி தெளிக்க வேண்டும்.
- தொழிலாளர்கள் தாங்கும் இடத்திலும் பாதிக்கப்பை உறுதி செய்ய வேண்டும்.
- வேலைக்கு வரும் தொழிலாளர்களுக்கு சானிடைசர், முக கவசம் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும்.
- 24 மணி நேரமும் செயல்படும் ஆலையில் ஒரு ஷிப்ட்டுக்கு ஒரு மணி நேர இடைவெளி தேவை என அறிவுறுத்தியுள்ளது.