வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்க இரண்டு பெண் பைலட்டுகள் அன்னையர் தினத்துக்கு முந்திய தினம் புறப்பட்டு சென்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாடுகளில் சிக்கி இந்தியாவிற்கு திரும்பி வர முடியாமல் தவித்து வரும் இந்தியர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மே 7ஆம் தேதி முதல் எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி வெளிநாட்டில் சிக்கிய இந்தியர்களை இரண்டு பெண் பைலட்டுகள் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் மீட்க நேற்று சென்றுள்ளனர்.
இதில் ஒரு விமானம் கேரளாவில் கொச்சியில் இருந்தும் மற்றொரு விமானம் தமிழ்நாட்டின் திருச்சியில் இருந்தும் புறப்பட்டுள்ளது இதில் குறிப்பிடத்தக்க விஷயம் இன்று அன்னையர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது. இந்த சூழலில் தாய்மார்களாக இருக்கும் இரண்டு பெண் பைலட்டுகள் அன்னையர் தினத்திற்கு ஒரு நாள் முன்பாகவே மீட்பு பணியில் களமிறங்கியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து 1.11 மணி அளவில் கோலாலம்பூருக்கு புறப்பட்ட மீட்பு விமானத்தில் கவிதா ராஜ்குமாரும், கொச்சியிலிருந்து மஸ்கட் செல்லும் விமானத்தின் மூலம் நேற்று 1.17 மணிக்கு கேப்டன் பிந்து செபஸ்டியனும் புறப்பட்டு சென்றுள்ளனர். இத்தகவலை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் உயர் அலுவலர் தெரிவித்துள்ளார்.