என் மனைவியை அவரது பெற்றோர் மறைத்து வைத்திருப்பதாகவும் மீட்டுத்தரக் கோரியும் இளைஞர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் சிருகம்பூர் மேட்டு தெருவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் அருகில் இருக்கும் சாத்தனூர் கிராமத்தை சேர்ந்த பிரசன்னா என்ற பெண்ணை பள்ளிப் பருவத்திலிருந்து காதலித்து இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் பிரசன்னா கர்ப்பமாக இருந்த காரணத்தினால் அவரது பெற்றோர் பிரசன்னாவை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அதன் பின்பு பிரசன்னாவை மணிகண்டன் பார்க்க முடியாமல் போயுள்ளது.
இதனை தொடர்ந்து தனது காதல் மனைவியை அவரது பெற்றோர் மறைத்து வைத்திருப்பதாகவும் தனது மனைவியை மீட்டுத் தர வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்து மணிகண்டன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவலர்கள் மணிகண்டனை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். ஊரடங்கு அமலில் இருக்கும் சமயத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.