இந்திய சீன எல்லைப் பகுதியில் சீன ராணுவ வீரர்களுக்கும் இந்திய ராணுவ வீரர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது
பாக்கிஸ்தான் போன்ற அண்டை நாடான சீனாவும் இந்தியாவிற்கு ஏதாவது ஒரு வகையில் தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கின்றது. இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் இருக்கும் அருணாச்சல பிரதேசத்திற்கு சீனா உரிமை கொண்டாடி வருகின்றது. அவ்வப்போது இந்திய நிலைகளுக்குள் சீன ராணுவம் ஊடுருவி இந்திய ராணுவம் எதிர்க்கவும் திரும்பி செல்லும் சம்பவங்கள் இதற்கு முன்னதாக பலமுறை நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில் இந்திய – சீன எல்லையான சீக்கிம் பகுதியில் சீன வீரர்களுக்கும் இந்திய வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீக்கியம் மாநிலத்தின் வடகிழக்கு எல்லையில் இருக்கும் நகு லா செக்டார் பகுதியில் இரண்டு நாட்டு வீரர்களும் எல்லைப் பகுதியில் காவல் பணியில் இருந்த பொழுது இருவரிடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இரண்டு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொண்டதில் இரு நாட்டு வீரர்களும் காயமடைந்துள்ளனர். 4 இந்திய வீரர்களும் 7 சீன வீரர்களும் மோதலில் காயமடைந்துள்ளனர். இவர்களிடையே சண்டை எழுந்த பொழுது சுமார் 150 வீரர்கள் அப்பகுதியில் இருந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இச்சம்பவம் குறித்து சீனா மற்றும் இந்தியா என இரண்டு நாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி மோதலை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
சீனா இந்தியா எல்லையான சிக்கிம் பகுதியில் எல்லைப் பிரச்சினை இருப்பதால் இவ்வாறு மோதல்கள் அவ்வப்போது ஏற்படும் என்றும், 2017 ஆம் ஆண்டு லடாக்கில் இரண்டு நாட்டு வீரர்களும் கற்களை வீசி தாக்கிக் கொண்டதாகவும், அதன்பின்னர் சிக்கிமின் டோக்லாம் பகுதியிலும் இரண்டு நாட்டு வீரர்களும் மோதலில் ஈடுபட்டதாகவும் இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.