ஜெர்மனியில் இன்று ஒரு நாள் மட்டும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு நாட்டின் எல்லைகள் திறக்கப்பட்டுள்ளது
ஜெர்மனியில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கத்துடன் அண்டை நாடுகளுடனான எல்லைகளை மூடி கடுமையான கட்டுப்பாடுகளை ஜெர்மனி அரசு விதித்துள்ளது. இந்நிலையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு இன்று ஒரு நாள் மட்டும் கட்டுப்பாடுகளை ஜெர்மனி அரசு நீக்கி எல்லைகளை திறந்துள்ளது. ஆனால் இந்த தளர்வு இன்று ஒரு நாள் மட்டும் தான் அமலில் இருக்கும் என்றும் ஜெர்மனிக்குள் வருபவர்கள் 24 மணி நேரத்திற்குள்ளாக வெளியில் சென்று விட வேண்டும் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்திருந்தது.
அதிலும் தாயாரை சந்திக்கும் நோக்கத்துடன் வருபவர்களுக்கு மட்டுமே நாட்டிற்குள் வருவதற்கு அனுமதி வழங்கப்படும் என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை முக்கிய காரணம் கொண்டவர்கள் மட்டுமே ஜெர்மனிக்குள் நுழைவதற்கான அனுமதி பெற்றுள்ளனர். குறிப்பாக மருத்துவ சேவையில் ஈடுபடுபவர்கள், எல்லைப் பகுதியை சேர்ந்த பயணிகள், லாரி ஓட்டுனர்கள். அவர்களது தகவல்கள் நம்பிக்கை கொடுப்பதாக இருந்தால் மட்டுமே நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள். இதனிடையே கொரோனா தொற்று பரவல் ஜெர்மனியில் கட்டுக்குள் இருப்பதாக அரசியல் தலைவர்கள் கூறி கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என கோரிக்கை முன்வைத்துள்ளனர்.