பஸ், ரயில் மற்றும் விமானம் வாயிலாகப் பயணிகள் போக்குவரத்து மிக அவசியம் என்பதால் அதனையும் தொடங்க வேண்டும் என ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 67,152 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு 3ம் கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 48வது நாளாக அமலில் உள்ள நிலையில் மே 17ம் தேதிக்கு பின்னர் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி காணொலி மூலம் இன்று மாலை அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
இதனிடையே நாடு முழுவதும் வரும் 12ம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவை துவங்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு துவங்கும் என்று தெரிவித்துள்ளது. புதுடெல்லியில் இருந்து, மும்பை, பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம் செகந்திராபாத், பெங்களூர், அகமதாபாத், ஜூம்மு தாவி, மும்பை, திப்ரூகர், அகர்தலா, ஹவுரா, பாட்னா, பிளாஸ்பூர், ராஞ்சி, புவனேஸ்வர்உள்ளிட்ட 15 நகரங்களை இணைக்கும் விதமாக இரு மார்க்கங்களிலும் 30 ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாநிலங்களுக்கு இடையே பயணிகள் ரயில்களைத் தொடங்கும் முடிவை வரவேற்கிறேன். இதே போன்று பஸ், விமானப் போக்குவரத்தையும் தொடங்கவேண்டும்.
பொருளாதார, வர்த்தக நடவடிக்கைகள் உண்மையிலேயே தொடங்க வேண்டுமென்றால், பஸ், ரயில் மற்றும் விமானம் வாயிலாகப் பயணிகள் போக்குவரத்து மிக அவசியம்.
— P. Chidambaram (@PChidambaram_IN) May 11, 2020
இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம், மாநிலங்களுக்கு இடையே பயணிகள் ரயில்களைத் தொடங்கும் முடிவை வரவேற்கிறேன். இதே போன்று பஸ், விமானப் போக்குவரத்தையும் தொடங்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். பொருளாதார, வர்த்தக நடவடிக்கைகள் உண்மையிலேயே தொடங்க வேண்டுமென்றால் பஸ், ரயில் மற்றும் விமானம் வாயிலாகப் பயணிகள் போக்குவரத்து மிக அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.