எவரெஸ்ட் சிகரத்தை முழுவதுமாக சீனா வைத்திருப்பதாக சீன அரசின் ஊடகமான, சீனா குளோபல் டெலிவிஷன் நெட்வொர்க் (China Global Television Network- CGTN ) செய்தி வெளியிட்டது. மேலும், “அன்பே நேபாளம், இது நியாயமானது என்று நீங்கள் நினைக்கவில்லையா? இதனை நீங்கள் எங்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்” என்றும் அந்த செய்தி நிறுவனம் ட்வீட் செய்திருந்தது.
இதையடுத்து சீனாவின் ஆதரவு செய்தியாளர்கள், சீன-திபெத்தின் எவரெஸ்ட் சிகரம் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். இதற்கு நேபாளம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. எவரெஸ்ட் சிகரத்தின் ஒருபகுதி மீது சீனா உரிமை கொண்டாடிவருகிறது. இந்த விவகாரம் 1960களில் எதிரொலித்தது. அப்போதைய நேபாள பிரதமர் பிஷ்வேஷ்வர் பிரசாத் கொய்ராலா சீனா சென்றபோது, இது தொடர்பாக பேசினார்.
அப்போது சீன குடியரசின் தந்தை என அழைக்கப்படும் மாவோ சேதுங், “எவரெஸ்ட் சிகரத்தை இரண்டாக பிரிக்க வேண்டும்” என வலியுறுத்தினார். மேலும், “தென்பகுதியை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள். வடபகுதி எங்களுக்கு சொந்தம்” என்றார். இதற்கிடையில் எவரெஸ்ட் சிகரத்துக்கு மறுபெயரிடவும் மாவோ விரும்பினார்.
அமெரிக்கா, சோவியத் யூனியன் (ரஷ்யா) மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இல்லாத பெருமை எங்களிடம் உள்ளது. அது, எங்களிடம் எட்டாயிரத்து 800 மீட்டர் உயரமான மலை சிகரம் உள்ளது என்று எவரெஸ்ட் ஆக்கிரமிப்பு மீதான தனது கனவை வெளிப்படுத்தினார். இவ்வாறு மாnவா தான் மறையும்வரை எவரெஸ்ட் மீதான தனது எண்ணத்தை அவ்வப்போது வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார்.
மாவோவின் எதிர்வினைக்கு பின்னர் எவரெஸ்ட் பிரச்னை மீண்டும் மீண்டும் அவ்வப்போது சர்ச்சையாகி, தீர்க்கப்படாமலே இருந்தது. இதற்கிடையில் இப்பிரச்னையை மீண்டும் சீனா கையிலெடுத்துள்ளது. உலகின் உயரமான மலையாக 8 ஆயிரத்து 884 மீட்டர் உயரமுடையதாக எவரெஸ்ட் சிகரம் அறியப்படுகிறது. இந்த சிகரத்துக்கு மலையேற்றம் மற்றும் சுற்றுலாவுக்காக ஏராளமான பயணிகள் ஆண்டுதோறும் படையெடுக்கின்றனர். இதன் மூலம் நேபாள அரசின் கஜானாவுக்கு குறிப்பிடத்தக்க வருவாய் கிடைக்கிறது.