தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சகைக்கான முதற்கட்ட ஆராய்ச்சி பணிகள் தொடங்கியிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சிகிச்சை முழு பயன்பாட்டிற்கு வர குறைந்தது 6 மாதங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பிளாஸ்மா பரிசோதனை சிகிச்சை செய்ய 21 மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில், மகாராஷ்டிராவில் உள்ள 5 மருத்துவமனைகள், குஜராத்தில் 4, தமிழகம், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 2 மருத்துவமனைகள், பஞ்சாப், தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு மருத்துவனைக்கு பிளாஸ்மா சிகிச்சை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் படி தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சைக்கான முதற்கட்ட பணிகள் துவங்கியது. கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் குணமடைந்தவர்களின் ரத்தத்தில் இருந்து பிளாஸ்மாவை பிரித்தெடுத்து மற்றொரு நோயாளிக்கு செலுத்தி குணமடைய செய்யும் முறை பிளாஸ்மா தெரபி. உலக நாடுகள் பல இந்த சிகிச்சை முறையை மேற்கொண்டு கொரோனா நோயாளிகளை குணப்படுத்தி வருகிறது.
இந்த சிகிச்சை முறைக்கு முதலில் எய்ம்ஸ் மருத்துவமனை துவக்கிய நிலையில், கேரளா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டன. தமிழகத்தில் கடந்த 8ம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மற்றும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் இந்த சிகிச்சை முறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
மேலும் 9 தனியார் மருத்துவமனைகள் இந்த சிகிச்சை முறையை மேற்கொள்ள இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கியிருந்தது. தற்போது, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஏற்கனவே நோய் தோற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 6 முதுநிலை மாணவர்கள், 40 வயது மதிக்கத்தக்க நபர் பிளாஸ்மா தானம் செய்துள்ளனர். இதையடுத்து ரத்தத்தில் இருந்து பிளாஸ்மாவை பிரித்தெடுக்கும் பணிகள் துவங்கியுள்ளன.