ரேஷன் கடைகளில் ஜூன் மாதத்திற்கான விலையில்லா பொருட்கள் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் மாதம் விலையில்லா பொருட்கள் வழங்க ரூ.219 கோடி நிதியை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஏப்ரல், மே மாதம் வழங்கப்பட்டது போல் ஜூன் மாதமும் பொருட்கள் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். கடந்த மே 5ம் தேதி, கொரோனாவை கட்டுபடுத்துவது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னை ரிப்பன் மாளிகையில் ஆலோசனை நடைபெற்றது. அதில், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சண்முகம், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ், டி.ஜி.பி. திரிபாதி, மாநகர ஆணையர் விஸ்வநாதன் உள்ளிட்ட உயரதிகாரிகளும் பங்கேற்றனர்.
பின்னர் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தொற்று பரவாமல் தடுக்க தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அரசின் வழிமுறைகளை பின்பற்றினால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று கூறிய அவர், பொதுமக்களுக்கு ஜூன் மாதமும் ரேஷன் கடைகள் மூலம் விலையில்லா பொருட்கள் வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். அதன்படி, இன்று ஜூன் மாதம் விலையில்லா பொருட்கள் வழங்க ரூ.219 கோடி நிதி ஒதுக்கி ரசனை வெளியிடப்பட்டுள்ளது.