கொரோனா தடுப்பு பணிகளுக்காக இந்தியாவுக்கு (3.6 மில்லியன் டாலர்) ரூ.27 கோடி நிதியுதவி வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை உள்ளிட்ட பணிகளுக்காக நிதி வழங்கப்படுவதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. கடந்த வருடம் நவம்பர் மாதம் சீனாவின் வுகான் மாகாணத்தில் உருவான இந்த கொரோனா வைரஸ் சுமார் 180க்கும் மேற்பட்ட நாடுகளை பதம் பார்த்து வருகிறது. அதில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடு அமெரிக்கா தான். தற்போது வரை அமெரிக்காவில் 1,385,850 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல, உலகளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் 11ம் இடத்தில் இந்தியா உள்ளது. தற்போது வரை இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70,756 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,293 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 22,455 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்தியா மிகப்பெரிய நிதிநெருக்கடியில் சிக்கியுள்ளது. மேலும், கொரோனா தடுப்பு நடைவடிக்கைகளுக்காக முன்பு உலக வங்கி நிதியுதவி வழங்கியது. இந்த நிலையில், கொரோனா தடுப்பு பணிகளுக்காக அமெரிக்கா ரூ.27 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது.