மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டு கொரோனா நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவில் இருக்கும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வென்டிலேட்டரில் மின் கசிவு ஏற்பட்டதன் மூலம் தீ விபத்து நடந்துள்ளது என ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. முதற்கட்ட தகவலின் படி சுமை அதிகமானதும் இயந்திரம் சூடானதும் தீ விபத்து ஏற்பட்டதற்கு காரணம் என அவசர சிகிச்சை துறையின் ஆதாரத்தை குறிப்பிட்டு இன்டர்ஃபாக்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
மருத்துவமனையில் இருந்து 150 பேர் வெளியேற்றப்பட்டு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அந்நாட்டின் அவசரம் அமைச்சகம் தெரிவித்துள்ளது. திடீரென ஏற்பட்ட இந்த தீ விபத்தில் வென்டிலேட்டரில் இருந்த 5 கொரோனா தொற்று நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். ஆனால் எத்தனை பேர் காயம் அடைந்துள்ளனர் என்பது குறித்து தெளிவான தகவல்கள் இதுவரை தெரியவரவில்லை. இச்சம்பவம் குறித்து குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.