இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 70ஆயிரத்தை உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25ஆயிரத்தை நெருங்கி வருகின்றது. 2,300க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில்கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 17 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மே 3ம் தேதி ஊரடங்கு உத்தரவு இருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் ஊரடங்கு உத்தரவானது இரண்டாம் முறையாக மே 17ம் தேதி வரை நீடிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவானது முடியவடைய இன்னும் 5 நாட்களே இருக்கும் நிலையில் நேற்று அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த ஆலோசனை 6 மணி நேரத்துக்கும் அதிகமாக நடைபெற்றது. இதில் ஊரடங்கை மேலும் நீடித்து அதிகப்படியான தளர்வுகளை கொடுக்கலாம் என்றும், மாநில முதல்வர்கள் 15ஆம் தேதி ஒரு அறிக்கையை மத்திய அரசுக்கு கொடுக்க பிரதமர் மோடி வலியுறுத்தியதாக சொல்லப்படுகின்றது.
இந்த நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் பேசுவதாக காலை பிரதமர் அலுவலகம் தெரிவித்ததையடுத்து தற்போது பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பேசி வருகின்றார். அதில், கொரோனா பரவல் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பேசுவது 5ஆவது முறையாகும். அதில் உலகை இந்தியா வழிநடத்த வேண்டும். உலகில் ஏற்பட்டு வரும் மாற்றத்தை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகின்றது. இந்தியாவுக்கு முக்கியமான வாய்ப்பை இந்த சூழல் கொண்டு வந்து இருக்கின்றது.
இந்த ஒரு வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தையே சின்னாபின்னமாக்கியிருப்பது வேதனை. உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு 3 லட்சம் பேர் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது. இது விட்டுவிடும் நேரமல்ல. நாம் வெற்றி பெற வேண்டும். கொரோனா வைரஸ் இதுவரை உலகம் பார்த்திராத ஒரு போர். கொரோனா வைரஸ் ஒட்டு மொத்த உலகத்தையே சூறையாடி விட்டது. நாம் நம்மை தற்காத்துக் கொண்டு முன்னேறி செல்ல வேண்டும். 21ம் நூற்றாண்டு இந்தியாவுக்கான காலம். தற்சார்பு என்பதுதான் இந்தியாவின் கலாச்சாரம் என்று பேசி வருகின்றார்.
உள்ளூர் உற்பத்தி, உள்ளூர் விற்பனை, உள்ளூர் விநியோகம் – இவைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். 4 ஆம் கட்ட ஊரடங்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மே 18 ஆம் தேதிக்கு முன்பாக வெளியிடப்படும்.மாநிலங்களின் பரிந்துரையின் பேரிலேயே 4 ஆம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று மோடி தெரிவித்தார்.