அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.83 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு இரண்டாவது முறையாக ரூ.1000 வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக நீடித்து வரும் ஊரடங்கால் வேலையிழந்து வீட்டில் முடங்கியிருக்கும் பல்வேறு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரண தொகையாக ரூ. 1000 வழங்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்த நிலையில் தற்போது 2ம் முறையாக ரூ.1000 நிதி வழங்கப்படும் என்றும் அதற்கென ரூ.83 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த தொகையானது, கட்டுமான தொழிலாளர்கள், உடல் உழைப்பு தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா ஓட்டுநர்களுக்கு, தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நிதியில் இருந்து வழங்க முடிவு செய்திருப்பதோடு இந்த நிவாரண தொகையை அவரவர் வங்கி கணக்கில் செலுத்தவும் முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் மீனவர்கள், பழங்குடியினர், திருநங்கைகள், சினிமா துறையினர் உள்ளிட்ட 14 வாரியத்தில் பதிவு செய்தவர்கள் பயனடைவார்கள். இந்த நிதியை பெற அமைப்பு சாரா தொழிலாளர் வாரியங்களில் பதிவு செய்து தங்கள் பெயர், தந்தை பெயர், பதிவு எண், அலைபேசி எண், வங்கி கணக்கு புத்தக சேமிப்பு எண், வங்கி கிளை போன்ற விவரங்களை [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். தொழிலாளர் உதவி கமிஷனர் அலைபேசி எண் 95662 81422 க்கு வாட்ஸ் ஆப் மூலமும் அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.